தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அசாருதீன் (32). அவரது முகநூல் பக்கத்தில் அலங்கார ஆடுகள் விற்பனை செய்யப்படுவதாக வெளியிடப்பட்ட விளம்பரத்தை பார்த்து, விளம்பரத்தில் குறிப்பிடப்பட்ட நபரை தொடர்பு கொண்டு ஆடுகளை வாங்குவதற்காக ₹44000/-ஐ ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். ஆனால், பணம் பெற்ற பின்னர் அந்த நபர் ஆடுகளை வழங்காமல், பணத்தையும் திருப்பி அளிக்காமல் ஏமாற்றியுள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அசோக்குமார், உத்தரவின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ஜீலியஸ் சீசர் வழிகாட்டல் படி, தீவிர விசாரணை நடத்திய காவல் ஆய்வாளர், பி. வசந்தி தலைமையிலான தனிப்படை சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த உமர் பாரூக் (30), என்பவரை அதிரடியாக கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட உமர் பாரூக் தமிழகம் தவிர பிற மாநிலங்களிலும் சுமார் 4 லட்சம் வரையில் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
மேலும் இது போன்ற மோசடி பேர்வழிகள் தங்களது சொந்த வங்கி கணக்குகளை பயன்படுத்தாமல் பிரவுசிங் சென்டர், (Browsing Centre) ஆன்லைன் சேவை மையங்கள், மற்றும் பொதுமக்களின் வங்கி கணக்குகளை வாடகைக்கு அல்லது கமிஷனுக்கு பெற்று, இணையவழி மூலம் பெறப்படும் பணத்தை வரவு வைக்க பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.
எனவே, உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள், சிறிய கமிஷன் அல்லது மாதாந்திர வாடகை பெறும் நோக்கில் தங்களது வங்கி கணக்கு, காசோலைப் புத்தகம், மொபைல் எண், சிம் கார்டு, Internet Banking> UPI ID அல்லது OTP போன்றவற்றை மற்றவர்களிடம் ஒப்படைக்கவோ, பயன்படுத்த அனுமதிக்கவோ கூடாது.
இவ்வாறு வழங்கப்படும் வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் எண்கள் இணையவழி மோசடிகளில் பயன்படுத்தப்பட்டால், அந்த வங்கி கணக்கு உரிமையாளர்களும் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்பட்டவர்களும் சட்டப்படி குற்றவாளிகளாக கருதப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.
இணைய மோசடி புகார்கள் குறித்து 1930 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும், அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கவும் காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















