தென்காசி: தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த (24). வயதுடைய பெண் ஒருவர், மர்ம நபர் ஒருவர் தன்னுடைய அனுமதியின்றி போலியாக இன்ஸ்டாகிராம் ஐடி உருவாக்கி, தன்னுடைய புகைப்படத்தையும் இணைத்து மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடப் போவதாக மிரட்டல் விடுப்பதாக தென்காசி மாவட்ட சைபர் கிரைம் குற்ற பிரிவில் புகார் அளித்தார். இது குறித்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அசோக்குமார் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ஜீலியஸ் சீசர் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர், வசந்தி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த தேரிச்சாமி(23). என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் இதுபோன்று பல பெண்களை மிரட்டியதும், அவர் மீது சைபர் குற்ற வழக்குகள் நீதிமன்ற நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.
புகார் பெற்ற 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்த சைபர் கிரைம் தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
மேலும் சைபர் குற்றங்கள் தொடர்பாக உடனடியாக 1930 உதவி எண்ணை தொடர்புகொள்ளவும் அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் பதிவு செய்யவும் மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















