திருச்சி: திருச்சி மாவட்டம், ஜெம்புநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடும்பத் தகராறு மற்றும் தனிப்பட்ட விரோதம் காரணமாக மாமியாரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் (01.06.2026) தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றவாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10,000/- அபராதமும் விதித்தது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதல் சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
குடும்பப் பிரச்சினை காரணமாக நடைபெற்ற இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக ஜெம்புநாதபுரம் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீண்டகால விசாரணைக்குப் பிறகு, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, கொலை உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சட்டத்தின் மூலம் உரிய தண்டனை வழங்கப்படும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.



















