திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. டோங்கரே பிரவிண் உமேஷ், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், லால்குடி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜமோகன் தலைமையில் (12.07.2026) சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் சிறப்பு போதைப் பொருள் தடுப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின்போது, மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் தீவிர ஆய்வு நடத்தப்பட்டதுடன், போதைப் பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் உடல்நல மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், போதைப் பொருட்கள் விற்பனை அல்லது பயன்பாடு தொடர்பான தகவல்கள் தெரிந்தால் உடனடியாக காவல்துறையின் உதவி எண்கள் மூலம் தெரிவிக்குமாறு மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், மாவட்டம் முழுவதும் இதுபோன்ற சிறப்பு சோதனைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.




















