மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. என். தேவநாதன் தலைமையில் சமயநல்லூர் உட்கோட்டத்திற்குட்பட்ட சமயநல்லூர் காவல் நிலைய எல்லைப் பகுதியில் நடை ரோந்து (Foot Patrolling) மேற்கொள்ளப்பட்டது. இந்த நடை ரோந்தின்போது, முக்கிய சாலைகள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
மேலும், காவல் துறையினர் பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடி, சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது குற்றச் செயல்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இதுபோன்ற நடை ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.




















