மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் உட்கோட்டம், வில்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவசக்கோட்டை கிராமத்தில், சட்டவிரோதமாக வெடிபொருட்களை பதுக்கி வைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வில்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. அன்னலட்சுமி தலைமயிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில், திருப்பதி (வயது 39). த/பெ. மாரிமுத்து மற்றும் அவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 30), க/பெ. திருப்பதி ஆகியோர் தங்களது தோட்டத்தில் சட்டவிரோதமாக வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்ததோடு, பட்டாசு தயாரிப்பிலும் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டது.
அவர்களிடமிருந்து சுமார் 100 கிலோ அளவிலான வெடிபொருட்கள் மற்றும் பட்டாசு தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்படும் சுமார் 2,000 பட்டாசு குழாய்கள் (Firecracker Pipe Rolls) பறிமுதல் செய்யப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், விருதுநகர் மாவட்டம், எம். புதுப்பட்டியில் இவர்கள் நடத்தி வந்த பட்டாசு தயாரிப்பு ஆலை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த வெடிபொருட்களை தங்களது சொந்த ஊரான கவசக்கோட்டைக்கு கொண்டு வந்து தோட்டத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து தொடர்ந்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வில்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்ட காவல்துறை, உரிய அனுமதியின்றி வெடிபொருட்கள் மற்றும் பட்டாசு தயாரிப்பு பொருட்களை பதுக்கி வைத்தல், தயாரித்தல் அல்லது கையாளுதல் பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சட்டவிரோத செயலாகும். இது போன்ற செயல்கள் குறித்து தகவல் அறிந்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது காவல்துறையின் அவசர உதவி எண்ணிற்கோ தகவல் தெரிவித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
\மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















