மதுரை: மதுரை மாநகர் தெற்கு ஆவணி மூலவீதியில் சாலையில் தவறி விழுந்த ரூ.4,900 பணத்தை கண்டெடுத்த பிங்க் பேட்ரோல் பெண் காவலர் தீபிகா, அதை உரியவரிடம் ஒப்படைத்து நேர்மைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தார். கடச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்த நாகரத்தினம், தனது பேரனுக்கு வெள்ளி கொலுசு வாங்குவதற்காக வந்தபோது, ஏடிஎம்மில் எடுத்த பணத்தில் ரூ.4,900 தவறி கீழே விழுந்ததை அறியாமல் சென்றுவிட்டார்.
பணத்தை கண்டெடுத்த காவலர் தீபிகா, போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஷோபனா தலைமையிலான போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து, சிசிடிவி காட்சிகள் மற்றும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் விவரங்கள் மூலம் விசாரணை நடத்தி, பணத்தை தவறவிட்ட நாகரத்தினத்தை போலீசார் கண்டறிந்தனர். தேவையான உறுதிப்படுத்தலுக்குப் பிறகு, நாகரத்தினத்திடம் ரூ.4,900 பணத்தை காவல்துறையினர் ஒப்படைத்தனர். பணத்தை மீட்டுக் கொடுத்த பெண் காவலர் தீபிகா மற்றும் போக்குவரத்து காவல்துறையினருக்கு நாகரத்தினம் நன்றி தெரிவித்தார். இந்த நேர்மையான செயலுக்காக பெண் காவல்துறையினருக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















