மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே குமார் நகர் பகுதியில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞரை காவல்துறையின் சிறப்பு குழுவினர் கைது செய்து, 5.5 கிலோ கஞ்சா, இரண்டு கத்திகள், மின்னணு எடை இயந்திரம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். ரகசிய தகவலின் பேரில் இன்று (12.07.2026) காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பியோட முயன்றனர். இதில், சொக்கம்பட்டியைச் சேர்ந்த அபிநேஷ் (22). என்பவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
அவரிடமிருந்து 5.5 கிலோ கஞ்சா, ஒரு மின்னணு எடை இயந்திரம், இரண்டு கத்திகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மேலூர் காவல் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புச் சட்டம் (NDPS Act) மற்றும் ஆயுதச் சட்டம் (Arms Act) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தப்பியோடிய மற்ற நபர்களை கைது செய்ய தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். போதைப்பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் ஆயுதங்களுடன் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற குற்றச்செயல்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் மதுரை மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















