கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சிங்கப்பெண் சிறப்புப் படை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஓசூர் பேருந்து நிலையம் மற்றும் கோகுல் நகர் பகுதிகளில் நடைபெற்றது. உதவி காவல் ஆய்வாளர் திருமதி ஜோதி தலைமையிலான குழுவினர் பொதுமக்களை சந்தித்து, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, இணையவழி குற்றங்களைத் தடுக்கும் வழிமுறைகள், அவசரகால உதவி எண்களின் பயன்பாடு மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், இணைய மோசடிகள், சமூக வலைதளங்களில் பாதுகாப்பாக செயல்படுவது, அவசரகாலங்களில் காவல்துறையின் உதவியை எவ்வாறு பெறுவது உள்ளிட்ட தகவல்களும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.




















