கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் ஓசூரில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றபோது, அதன் ஓட்டுநர் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடினார்.
பின்னர், போலீசார் வாகனத்தில் சோதனை மேற்கொண்டதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் ரூ.79 ஆயிரம் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் அவற்றைக் கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து, ஓசூர் நகர காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தப்பியோடிய வாகன ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















