கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் அருகே உள்ள கீழ்குளம் பருத்திவிளை பகுதியைச் சேர்ந்த வின்சென்டின் மகள் வினிஷா (16). கீழ்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, கீழ்குளம் கிராம நிர்வாக அலுவலகம் அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்த மாணவியிடம், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்ததைத் தொடர்ந்து, சங்கிலியை பறிக்க முயன்ற நபர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார்.
இது குறித்து மாணவியின் தந்தை வின்சென்ட் புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கீழ்குளம் அருகே உள்ள பரக்கன்விளை பகுதியைச் சேர்ந்த பென்டவின் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருட்டு உள்ளிட்ட 14 வழக்குகள் ஏற்கனவே அவர் மீது பதிவாகி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.




















