திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 61 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஸ்வேஷ் பா சாஸ்திரி, இ.காப., வெளியிட்ட செய்திக்குறிப்பு. மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, சட்டம்-ஒழுங்கு நிலைநிறுத்தம் மற்றும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கக் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
நிகழாண்டில் இதுவரை மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 31 பேர், பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 11 பேர் மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 19 பேர் என மொத்தம் 61 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்களின் நலனை உறுதி செய்யவும், சட்டவிரோத மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ரெளடிகள், வழிப்பறி மற்றும் பிற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















