திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் சார்பில் மானூர் அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் (22.07.2026) அன்று போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஸ்வேஷ் பா.சாஸ்திரி, இ.கா.ப தலைமை வகித்து உரையாற்றிய போது: பாதுகாப்பான மற்றும் போதையில்லா சமூகத்தை உருவாக்குவதில் மாணவா்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புப் பணிகளில் மாணவா்களின் பங்களிப்பு மிக அவசியம். அவர்கள் காவல்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
எவ்வித போதைப்பொருள் பழக்கத்திற்கும் அடிமையாகக் கூடாது. போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஜாதி, மதம் உள்ளிட்ட எந்தவித பாகுபாடுகளுக்கும் இடமளிக்காமல், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வுடன் வாழ வேண்டும். மாணவர்கள் ஜாதி ரீதியான செயல்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து, கல்வி மற்றும் விளையாட்டில் முழு கவனம் செலுத்தி, தங்களது திறமைகளை மேம்படுத்தி, சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி, நல்ல குடிமக்களாக வளர வேண்டும் என்றார் அவர். நிகழ்ச்சியில் மனநல மருத்துவர், அசோக், கல்லூரி முதல்வர் டாரதி, தாழையூத்து காவல்துணைக் கண்காணிப்பாளர் ரகுபதி ராஜா, காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















