மதுரை: மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னமங்கலம் கண்மாய் பகுதியில், பணம் வைத்து ரம்மி சீட்டுகளை பயன்படுத்தி சட்டவிரோத சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, செக்கானூரணி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பணம் வைத்து ரம்மி விளையாடிக் கொண்டிருந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட ரம்மி சீட்டுகள், ரூ.4,21,160 ரொக்கப்பணம், 14 செல்போன்கள் மற்றும் 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள்: ஜெயபாண்டி (47, வடக்கம்பட்டி), ரகு (35, உசிலம்பட்டி), தர்மர் (47, வடக்கம்பட்டி), பாலமுருகன் (45, மையனம்பட்டி), சேதுராமன் (55, காளப்பன்பட்டி), குழந்தைராஜ் (44, கழுங்குபட்டி), சுப்பிரமணியன் (55, சிட்லகுண்டு), ரகுநாதன் (42, வி.கோவில்பட்டி), வெங்கடேசன் (41, சிட்லகுண்டு), பிரபு (33, கரடிபட்டி) மற்றும் மோகன்குமார். இந்த சம்பவம் தொடர்பாக செக்கானூரணி காவல் நிலைய போலீசார் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடியுள்ள மற்ற தொடர்புடைய நபர்களை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பணம் வைத்து ரம்மி உள்ளிட்ட சட்டவிரோத சூதாட்டங்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து தீவிர கண்காணிப்புடன் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் குறித்து தகவல் அறிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்து ஒத்துழைப்பு வழங்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















