மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே வீரப்பெருமாள்புரத்தில் உள்ள கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில், வீரப்பெருமாள்புரம், எஸ்.பி. நத்தம், வளையங்குளம், அரசப்பட்டி உள்ளிட்ட 11 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்திற்காக அடகு வைத்த 346 சவரன் தங்க நகைகள் மாயமானதாகப் புகார் எழுந்துள்ளது. நகைகளை மீட்பதற்காக கடனைச் செலுத்திய பின்னரும் நகைகளைத் திருப்பிக் கொடுக்காமல் காலதாமதம் செய்ததாகவும், வங்கிச் செயலர் மணிகண்டன் 346 சவரன் நகைகளுடன் மாயமானதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக கடந்த மூன்று நாட்களாக திருமங்கலத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, துணைப் பதிவாளர் கண்ணம்மாள் விரைவில் நகைகளை மீட்டுத் தருவதாக உறுதியளித்தார். தொடர்ந்து, வீரப்பெருமாள்புரம் கூட்டுறவு சங்கத்தில் ஆறு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளச் சென்ற துணைப் பதிவாளர் கண்ணம்மாளிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவரது கைப்பையில் இருந்த நான்கு சவரன் தங்க நகைகள் குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து அந்த நகைகள் குப்பைத்தொட்டியில் போடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கு வந்த திருமங்கலம் டிஎஸ்பி இமயவர்மனிடமும் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தின் முடிவில், மாயமான நகைகளை மீட்டு, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி உறுதியளித்தார். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும், நாளை கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் வங்கியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















