மதுரை: மதுரையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் ரூ.21 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான நிஷாந்த், போலீசாரால் தருமபுரியில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளான். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டும், மதுரையில் தாங்கள் கட்டி வரும் புதிய வீட்டிற்குப் பணம் இல்லாததாலும், யூடியூபரான தனது காதலி மீனாட்சியுடன் இணைந்து நிஷாந்த் இந்த மெகா கொள்ளையைத் திட்டமிட்டுள்ளான். இந்த வழக்கில் மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், 5 நாட்களாக தலைமறைவாக இருந்த நிஷாந்த், ஆம்னி பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தற்போது சிக்கியுள்ளான்.
தனிப்படை போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, பேருந்துகளிலும் ரயில்களிலும் மாறி மாறி பயணம் செய்த நிஷாந்த், இறுதியாக பெங்களூருவில் இருந்து சேலம் செல்லும் தனியார் ஆம்னி பேருந்தில் ஏறியுள்ளான். வழியில் அவனுக்கு உணவு வாங்கித் தருமாறு அவனது கூட்டாளிகள் 3 பேர் ஓட்டுநரிடம் ரூ.500 கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர். ஓசூர் ராயக்கோட்டை பைபாஸ் அருகே பேருந்து தேநீர் இடைவேளைக்காக நிறுத்தப்பட்டபோது, நிஷாந்த் ஓட்டுநரின் செல்போனை இரவல் வாங்கி யாரிடமோ பேசியுள்ளான். அப்போது, “நான் நிஷாந்த் பேசுறேன்” என்று அவன் கூறிய ஒற்றை வார்த்தை ஓட்டுநரின் காதில் விழுந்துள்ளது.
முகத்தை தொப்பியால் மறைத்திருந்தாலும், அவனது பேச்சைக் கேட்டு சந்தேகமடைந்த ஓட்டுநருக்கு, சமூக வலைதளங்களில் வைரலான மதுரை கொள்ளையனின் வீடியோக்கள் நினைவுக்கு வந்துள்ளன. உடனடியாக சுதாரித்துக்கொண்ட அவர், தருமபுரி அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் தனது போலீஸ் நண்பருக்குத் தகவல் கொடுத்துள்ளார். போலீசாரின் ஆலோசனையின்படி, தருமபுரி அருகே சேஷம்பட்டியில் உள்ள ஒரு டீ கடையில் பேருந்து நிறுத்தப்பட்டது.
பயணிகள் அனைவரும் கீழே இறங்கியவுடன், அங்கு முன்னதாகவே காத்திருந்த போலீசார் பேருந்தை நாலாபுறமும் சுற்றி வளைத்தனர். தன்னை போலீசார் நெருங்குவதை உணர்ந்த நிஷாந்த், ஓட்டுநரின் இருக்கை வழியாகக் குதித்துத் தப்ப முயன்றான். எனினும், போலீசார் துரிதமாகச் செயல்பட்டு அவனை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். ஓட்டுநரின் சமயோசித புத்தியும், சாமர்த்தியமான செயல்பாடுகளுமே இந்த முக்கியக் கொள்ளையன் சிக்கக் காரணம் என போலீசார் அவருக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.



















