மதுரை: மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டத்தில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மதுரை மாவட்ட காவல்துறையின் சிறப்புக் குழுவினருக்கு (Special Team) ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், இன்று (12.11.2026) காலை சிறப்புப் படை அமைக்கப்பட்டு, குழுவினர் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கருப்பாயூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சமூக நீதி மாணவர் விடுதி அருகிலுள்ள சுடுகாடு பகுதியில், காவல்துறையினரைக் கண்டதும் அங்கிருந்த நபர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களில், தமிழ் செல்வி, 30, க/பெ. கீதன், முகவூர், விருதுநகர் மாவட்டம். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜோஷ்ணபானி, 26, க/பெ. சபன்குமார், ஆர். உதயகிரி, கஜபதி, ஒடிசா.ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து, 1. கஞ்சா – 4 கிலோ மற்றும் 2. பணம் – ரூ.81,900/- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக கருப்பாயூரணி காவல் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் (NDPS Act) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.மேலும், கைது செய்யப்பட்ட முதல் எதிரியான தமிழ் செல்வி மற்றும் அவரது கணவர் கீதன் ஆகியோர் மீது தூத்துக்குடி NIB CID மற்றும் ஆறுமுகநேரி காவல் நிலையத்திலும், இரண்டாவது எதிரியான ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜோஷ்ணபானி மற்றும் அவரது சகோதரர் சந்தோஷ்பானி ஆகியோர் மீது தேனி மாவட்டம், தென்கரை காவல் நிலையத்திலும் NDPS வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.
மதுரை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை, கடத்தல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தேவநாதன் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற குற்றச்செயல்கள் குறித்து தகவல் தெரிந்தால், உடனடியாகக் காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















