மதுரை: மதுரை மாநகராட்சி, மண்டலம்-2, வண்டியூர் கண்மாய் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், நீர்நிலைகளில் உள்ள ஆகாயதாமரைகள் மற்றும் கழிவு பொருட்களை இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்றதை பார்வையிட்டார். மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வண்டியூர் கண்மாய், செல்லூர் கண்மாய், கரிசல் குளம் கண்மாய், ஆனையூர் கண்மாய், நாராயணபுரம் கண்மாய், மாரியம்மன் தெப்பக்குளம் போன்ற நீர்நிலைகளில் உள்ள கழிவு பொருட்கள் மற்றும் ஆகாய தாமரை செடிகளை அகற்றுவதற்கு ஏதுவாக இரண்டு Robatric Skimmer இயந்திரங்களை “CITI BANK & IITMIC” மற்றும் “VIVRITHI CAPITAL” ஆகிய நிறுவனங்கள் மதுரை மாநகராட்சிக்கு CSR திட்டத்தின் கீழ் வழங்கியுள்ளது.
ஒரு இயந்திரத்தின் விலை ரூ.12 லட்சம் ஆகும். Robatric Skimmer இயந்திரம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய இயந்திரம் என்பதால் இயந்திரத்தில் உள்ள கேமரா மூலம் நீர்நிலைகளில் உள்ள கழிவுகளை கண்டறிந்து அகற்றும் திறன் கொண்டது. மேற்படி இயந்திரம் “SCRAPIFY ECOTECH PVT LTD” என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டது. முன்னதாக, ஆணையாளர் , வண்டியூர் பூங்காவின் முன்புறம் நடைபாதையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் வாகனங்களை பார்வையிட்டதுடன், அவற்றை உடனடியாக அகற்றுமாறும் அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும், பூங்காவின் முன்புறம் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் கண்காணித்து வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து பிரித்துப் பெறப்படும் ஈரக்கழிவுகள், 38 நுண் உரமாக்கல் மையங்களில் (Micro Compost Centres) இயற்கை உரமாக மாற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஈரக்கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரம், வண்டியூர் பூங்காவில் பொதுமக்களுக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இன்று மாநகராட்சி ஆணையாளர்
விற்பனையை பார்வையிட்டு, அலுவலர்களிடம் கேட்டறிந்ததுடன், இயற்கை உரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். இந்த ஆய்வின்போது, உதவி ஆணையாளர் தமிழரசன் , செயற்பொறியாளர் அர்ச்சனா , உதவி செயற்பொறியாளர் ஆரோக்கிய சேவியர் , உதவி செயற்பொறியாளர் காமராஜ் , சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி



















