திருநெல்வேலி: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி, IPS., அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற சிறப்பு நடவடிக்கையில், வன்கொடுமை தடுப்புச் சட்டம், அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர்களுமாக மொத்தம் 14 நீதிமன்ற பிடியாணை (NBW) குற்றவாளிகள் மீது பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


















