திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த மூன்று நாட்களில் கூடங்குளம், வி.கே.புரம், மணிமுத்தாறு, தாழையூத்து, ராதாபுரம், கங்கைகொண்டான், சிவந்திப்பட்டி, பணகுடி, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், சட்டவிரோதமாக மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த நபர்கள் மீது 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், 413 மதுபாட்டில்கள், சில வழக்குகளில் பணம் மற்றும் இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்கவும், இதில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















