கேரளாவில் வாகனத் தணிக்கையின்போது, இருசக்கர வாகனத்தில் பின்புறக் கண்ணாடி (Rear View Mirror) இல்லாததால் தினக்கூலித் தொழிலாளி ஒருவருக்கு போலீசார் ரூ.250 அபராதம் விதித்தனர். அப்போது, கடந்த சில வாரங்களாக மழையால் வேலை இல்லாமல் வருமானமின்றி தவித்து வருவதாகவும், தனது மகளின் பிறந்தநாளுக்காக வைத்திருந்த ரூ.200 மட்டுமே கையில் இருப்பதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். இதைக் கேட்ட போலீசார், அந்தத் தொழிலாளியின் நிலையை அறிந்து நெகிழ்ந்தனர்.
தொடர்ந்து, அவருடன் அவரது வீட்டிற்குச் சென்ற போலீசார், குழந்தையின் பெயர் பொறிக்கப்பட்ட பிறந்தநாள் கேக், அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்க சாக்லேட் பெட்டிகள் மற்றும் சிறுமிக்கு புத்தாடைகள் ஆகியவற்றை வாங்கிச் சென்று வழங்கினர். மேலும், அந்தச் சிறுமியின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடி மகிழ்ச்சியை ஏற்படுத்தினர். அபராதம் விதிக்கச் சென்ற இடத்தில், ஏழைத் தொழிலாளியின் குடும்பச் சூழலைப் புரிந்துகொண்டு மனிதநேயத்துடன் செயல்பட்ட கேரள போலீசாரின் இந்தச் செயல் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

















