கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியில் மாயமான 3 வடமாநிலக் குழந்தைகளை சிப்காட் போலீசார் புகார் அளிக்கப்பட்ட 40 நிமிடங்களில் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் மூக்கண்டப்பள்ளி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்தபோது, வீட்டில் இருந்த 7 மற்றும் (6). வயதுடைய இரண்டு சிறுமிகள், (4). வயது சிறுவன் என மூன்று குழந்தைகளும் விளையாடச் சென்ற இடத்தில் மாயமாகினர்.
வேலை முடிந்து வீடு திரும்பிய பெற்றோர் குழந்தைகளைக் காணாமல் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இரவு 7.30 மணியளவில் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் இளவரசன் தலைமையிலான போலீசார் உடனடியாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மூக்கண்டப்பள்ளி பொதிகை நகரைச் சேர்ந்த வீர கவுண்டன் என்பவர், அப்பகுதியில் மூன்று குழந்தைகள் வழிதெரியாமல் சுற்றித் திரிவதாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற போலீசார் குழந்தைகளைப் பத்திரமாக மீட்டு, அவர்கள் மாயமான குழந்தைகள்தான் என்பதை உறுதி செய்தனர். புகார் அளிக்கப்பட்ட 40 நிமிடங்களிலேயே குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்

















