திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கருத்தரித்தல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் பிரியங்கா, உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தாயின் உடல்நிலை மற்றும் குழந்தைகளின் நிலை குறித்து மருத்துவர்கள் முறையாகத் தகவல் தெரிவிக்கவில்லை என்றும், அவரைப் பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி, பிரியங்காவின் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், தனியார் மருத்துவமனை மருத்துவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து தொடர்ந்து சிகிச்சை அளித்தது குறித்தும் உறவினர்கள் கேள்வி எழுப்பினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















