சென்னை: பொதுமக்களின் வங்கிக் கணக்குகளை குறிவைத்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இணையவழி மோசடிகளைத் தடுப்பது தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் ரிசர்வ் வங்கியின் உயர் அதிகாரிகள் இடையேயான முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. தற்போதைய காலகட்டத்தில் சைபர் குற்றவாளிகள் பல்வேறு நூதன முறைகளில் பொதுமக்களின் பணத்தைத் திருடி வருகின்றனர். வங்கி அதிகாரிகள் போல் தொலைபேசியில் ஆசை வார்த்தை கூறுவது, போலியான குறுஞ்செய்திகள் மற்றும் இணையதள லிங்குகளை அனுப்புவது, போலி வங்கி செயலிகளைப் பதிவிறக்கம் செய்யத் தூண்டுவது, மற்றும் ஓடிபி (OTP) உள்ளிட்ட வங்கி ரகசியங்களைப் பெற்று பணத்தை சுருட்டுவது போன்ற குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், வங்கிகளின் பாதுகாப்புக் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும் இந்தச் சந்திப்பு ஒருங்கிணைக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஜெயகுமார் தலைமையிலான குழுவினர், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜை நேரில் சந்தித்து இது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். அரசு மற்றும் தனியார் வங்கிகளில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்படுவதைத் தடுப்பது, இணையவழி பணப் பரிவர்த்தனைகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைக் களைவது மற்றும் வங்கிக் கணக்குகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவது ஆகிய முக்கிய அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும், மோசடி அழைப்புகள் மற்றும் போலியான இணைப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்தும் பேசப்பட்டது. பொதுமக்களின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய சென்னை காவல்துறையும், ரிசர்வ் வங்கியும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ரிசர்வ் வங்கியின் முதன்மை பொது மேலாளர் அனிதா பட்நாயக், பொது மேலாளர் சதீஷ்குமார், துணைப் பொது மேலாளர் கேப்டன் சுதாகர் மற்றும் லெப்டினன்ட் கர்னல் வீரஜ் கருணாகர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.



















