சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன், தீபாவளியன்று நண்பர்களுடன் பட்டாசு வெடித்தபோது, எவர்சில்வர் டம்ளரைக் கவிழ்த்து அதன் அடியில் பட்டாசை வைத்து வெடிக்கச் செய்துள்ளார். அப்போது டம்ளர் சிதறி, அதன் சிறிய உலோகத் துண்டு சிறுவனின் அடிவயிற்றில் பாய்ந்து காயத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து காரைக்குடி குளோபல் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், உலோகத் துண்டு வயிற்றுப் பகுதியைக் கிழித்துக்கொண்டு குடல் வழியாகச் சென்று முதுகுத்தண்டுக்கு அருகில் சிக்கியிருப்பது தெரியவந்தது.
மருத்துவமனையின் தலைவர் டாக்டர் குமரேசன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சுமார் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, சிறுவனின் வயிற்றில் சிக்கியிருந்த உலோகத் துண்டை வெற்றிகரமாக அகற்றினர். தற்போது சிறுவன் நலமுடன் இருந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவக் குழுவினரின் துரிதமான செயல்பாட்டையும் சிறப்பான சிகிச்சையையும் டாக்டர் குமரேசன் பாராட்டினார். மேலும், பண்டிகைக் காலங்களில் பட்டாசுகளைப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி கவனத்துடன் வெடிக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி


















