மதுரை: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கப்பன் என்பவரின் மகன் பாலகிருஷ்ணன், டெலிவரி நிறுவனத்திற்குச் சொந்தமான ஈச்சர் சரக்கு வாகனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 03.11.2026 அன்று அதிகாலை தேவாரத்திலிருந்து மதுரைக்கு பார்சல்கள் மற்றும் ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிச் சென்றபோது, வாலாந்தூர் கண்மாய் கரை அருகே வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் வாகனத்தில் இருந்த சரக்குகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், வாலாந்தூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 113/2026-ன் கீழ் தற்செயலான தீ விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு தொடர்பான சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்வதற்காக விசாரணை அதிகாரிக்கு உதவ, பாலகிருஷ்ணன் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது காவல் ஆய்வாளரின் அறையில் இருந்த அவர், அதிகாலை சுமார் 6 மணியளவில் கழிவறைக்குச் சென்றபோது தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்று மயங்கிய நிலையில் இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவர் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
மேலும், பணியில் இருந்த காவல் ஆய்வாளர் மற்றும் தொடர்புடைய காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடத்த நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிடப்பட உள்ளது. மேலும், வழக்கின் விசாரணை சிபிசிஐடி (CB-CID) பிரிவுக்கு மாற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















