சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் “I-2050” என்ற தலைப்பில் Project Day விழா (14.11.2026) அன்று மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. இவ்விழாவில் CBSE சென்னை மண்டலத்தின் மண்டல அலுவலர் ( Regional Officer) P. ரமேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பள்ளி முதல்வர் ராமசுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து, I-2050 என்ற கருப்பொருள் அறிமுகம் செய்யப்பட்டது. பள்ளித் துணைத் தலைவர் ( Vice Chairman) தனது உரையில், ஒவ்வொரு மாணவருக்குள்ளும் அளப்பரிய ஆற்றலும் தனித்துவமான திறமையும் புதைந்துள்ளன என்பதை எடுத்துரைத்தார்.
மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் ஆற்றலை உணர்ந்து, தன்னம்பிக்கையுடன் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, உயர்ந்த இலக்குகளை நோக்கிப் பயணிக்க வேண்டும் என ஊக்கமளித்தார்.
பள்ளித் தலைவர் (Chairman) தனது தலைமையுரையில், “2050-ஆம் ஆண்டில் இந்தியா எத்தகைய வளர்ச்சியை அடைந்திருக்கும் என்பதையும், அந்த எதிர்கால இந்தியாவின் திறமைகளையும் இன்றே நமது மாணவர்களிடம் காண்கிறேன்” என்ற தொலைநோக்குச் சிந்தனையை வெளிப்படுத்தினார். மாணவர்களின் புதுமைச் சிந்தனை, அறிவியல் ஆர்வம் மற்றும் படைப்பாற்றலைப் பாராட்டி, எதிர்கால இந்தியாவை உருவாக்கும் ஆற்றல் இன்றைய மாணவர்களிடம் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
சிறப்பு விருந்தினர் திரு. P. ரமேஷ் அவர்கள் தனது சிறப்புரையில், எதிர்கால உலகில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் ஆகியவற்றை எடுத்துரைத்தார். மாணவர்கள் பாடப்புத்தகக் கல்வியுடன் நின்றுவிடாமல், சுயசிந்தனை, ஆராய்ச்சி மனப்பான்மை, படைப்பாற்றல் மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறன் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொழில்நுட்ப வளர்ச்சியையும் மனிதநேயத்தையும் எடுத்துரைக்கும் வகையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று பார்வையாளர்களைக் கவர்ந்தன.
இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியில் மழலையர் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தங்களது அறிவியல் சிந்தனை, தொழில்நுட்ப அறிவு மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு புதுமையான படைப்புகளை உருவாக்கிக் காட்சிப்படுத்தினர்.
மழலையர் மாணவர்கள் “Rainbow Smart Garden” என்ற தலைப்பில் ஸ்மார்ட் தோட்டம் (Smart Garden), ஸ்மார்ட் பழ ஸ்கேனர் (Smart Fruit Scanner) ஆகிய இரண்டு முக்கியப் படைப்புகளை உருவாக்கிக் காட்சிப்படுத்தினர். மேலும், மரக்கன்றுகளைப் பரிசாக வழங்கி இயற்கை பாதுகாப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினர். இதில் 22 மாணவர்கள் பங்கேற்றனர்.
வானிலை ஆய்வகம் மற்றும் ஒளி ஆய்வகம் (Weather Lab & Light Lab) தொடர்பாக 15 மாணவர்கள் ஒன்றிணைந்து 7 மாதிரிகளையும், ஒலி ஆய்வகம் மற்றும் விண்வெளி ஆய்வகம் (Sound Lab & Space Lab) தொடர்பாக 22 மாணவர்கள் ஒன்றிணைந்து 12 மாதிரிகளையும் உருவாக்கிக் காட்சிப்படுத்தினர்.
3, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் 40 பேர் ஒன்றிணைந்து வேளாண்மை மற்றும் உணவு (Agriculture and Food) தொடர்பாக 7 மாதிரிகளை உருவாக்கிக் காட்சிப்படுத்தினர். 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் 26 பேர் ஒன்றிணைந்து உடல்நலம் மற்றும் சுகாதாரம் (Health and Hygiene) தொடர்பாக 8 மாதிரிகளை உருவாக்கிக் காட்சிப்படுத்தினர். 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 50 பேர் ஒன்றிணைந்து பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை (Safety and Disaster Management) தொடர்பாக 21 மாதிரிகளை உருவாக்கிக் காட்சிப்படுத்தினர்.
11 ஆம் வகுப்பு மாணவர்கள் வணிகவியல் மற்றும் மென்பொருள் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மொத்தம் 84 மாணவர்கள் ஒன்றிணைந்து 29 மாதிரிகள் மற்றும் மென்பொருள் திட்டங்களை உருவாக்கிக் காட்சிப்படுத்தினர். 12 ஆம் வகுப்பு மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் புதுமைப் படைப்புகள் (Innovation) ஆகிய தலைப்புகளில் மொத்தம் 44 மாணவர்கள் ஒன்றிணைந்து 21 மென்பொருள் திட்டங்கள் மற்றும் மாதிரிகளை உருவாக்கிக் காட்சிப்படுத்தினர்.
இவ்வாறு, மழலையர் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்பு வரை மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு படைப்புகளை உருவாக்கினர். இக்கண்காட்சியில் மொத்தம் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, 100 க்கு மேற்பட்ட அறிவியல் மாதிரிகள் மற்றும் மென்பொருள் திட்டங்களை காட்சிப்படுத்தினர்.
மாணவர்கள் குழுவாக இணைந்து தங்களது திட்டங்களைச் செயல்முறை விளக்கங்களுடன் பார்வையாளர்களுக்கு எடுத்துரைத்தனர்.
முக்கியப் பிரமுகர்கள் மாணவர்களின் படைப்புகளைப் பார்வையிட்டுப் பாராட்டினர். தொடர்ந்து பெற்றோர்களும் கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டு மாணவர்களின் படைப்பாற்றல், செயல்திறன் மற்றும் புதுமையான சிந்தனைகளை வெகுவாகப் பாராட்டினர். எதிர்கால உலகின் சவால்களையும் வாய்ப்புகளையும் எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களின் அறிவியல் சிந்தனை, தொழில்நுட்ப அறிவு, தன்னம்பிக்கை, குழு முயற்சி மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் சிறந்த களமாக இவ்விழா அமைந்தது. மாணவர்களின் திறமைகளையும் எதிர்காலக் கனவுகளையும் வெளிப்படுத்திய இந்நிகழ்வு அனைவரின் பாராட்டுகளுடன் இனிதே நிறைவடைந்தது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















