சிவகங்கை: அரசு சிவகங்கை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருந்தியல் துறை சார்பில், 6-வது தேசிய மருந்துகள் கண்காணிப்பு வாரம் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் 23 வரை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு மருந்துகளின் பாதுகாப்பான பயன்பாடு, பக்கவிளைவுகள் மற்றும் அவற்றைத் தடுப்பதன் முக்கியத்துவம் குறித்து துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மருத்துவ மாணவர்களின் பங்கேற்புடன் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி மருத்துவக்கல்லூரி முதல்வர் உயர்திரு. S. கலைவாணி, உதவி முதல்வர் உயர்திரு. P. விசாலாட்சி, மருத்துவக் கண்காணிப்பாளர் A. தமிழ்வாணன், உறைவிட மருத்துவர் A. முகம்மது ரபீக், உதவி உறைவிட மருத்துவர்கள் ஃபேஷன் M. தென்றல் மற்றும் A. வெங்கடேஷ், துறைத்தலைவர் R. நவஜோதி மற்றும் ஏனைய மருத்துவ அலுவலர்கள் தலைமையில் நடைபெற்றது. மருத்துவ மாணவர்களிடையே மருந்துகள் கண்காணிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வினாடி-வினா, ரங்கோலி, சுவரொட்டி (Poster), பாகமேற்று நடித்தல் (Role Play) உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. மேலும், செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு, மருந்துகளின் பக்க விளைவுகளைத் தடுப்பது, அவற்றை முறையாகக் கண்டறிதல் மற்றும் பக்கவிளைவுகளுக்கான காரணங்களை ஆராய்தல் குறித்து சிறப்பு விரிவுரைகள் வழங்கப்பட்டன. பொதுமக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதாரப் பணியாளர்களிடமும், மருந்துகளின் பக்கவிளைவுகளைத் தடுப்பது, அவற்றை முறையாகக் கண்காணிப்பது மற்றும் பக்க விளைவுகளுக்கான காரணங்களை ஆராய்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தேசிய மருந்துகள் கண்காணிப்பு வாரத்தின் முக்கிய நோக்கமாகும்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















