திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், அம்பிளிக்கை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னையாகவுண்டன்வலசு, எல்லைப்பாறை குளம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒட்டன்சத்திரம் உட்கோட்ட பொறுப்பு காவல் துணைக் கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையில், காவல் ஆய்வாளர் லிங்கபாண்டியன், சார்பு ஆய்வாளர் சவடமுத்து மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் இன்று (நவம்பர் 22) மதியம் எல்லைப்பாறை குளம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக கும்பலாக நின்றிருந்த 9 பேர், போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்து விசாரணை நடத்தியதில், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து சுமார் 7 கிலோ கஞ்சா, ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 4 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 9 பேரும் அம்பிளிக்கை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் இதுவரை 635 பேர் கைது!
திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை கஞ்சா தொடர்பாக 396 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 635 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து மொத்தம் 282 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 16 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைக் கடத்துதல், பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















