சிவகங்கை: அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் குழந்தைகள் நலத்துறை சார்பில் தேசியப் பச்சிளம் குழந்தைகள் வார விழா (15.11.2026) முதல் (21.11.2026_ வரை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டின் கருப்பொருளான “சிறிய குழந்தைகள், அளப்பரிய ஆற்றல்: அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க தொடர் மருத்துவக் கண்காணிப்பில் முதலீடு செய்வோம்” (Small babies, big potential: Invest in Follow-up care to protect their future) என்பதை மையமாகக் கொண்டு பல்வேறு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதன் நிறைவு விழா (20.11.2026) அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் மருத்துவர் S. கலைவாணி, MD., DV அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மகப்பேறு மற்றும் மகளிர் நலத்துறை பொறுப்புத் தலைவர் பேராசிரியர் மருத்துவர் D. நாகசுதா, இணைப் பேராசிரியர் மருத்துவர் தென்னரசி, உறைவிட மருத்துவ அலுவலர் மருத்துவர் S. முகமது ரஃபி ஆகியோர் கலந்து கொண்டனர். குழந்தைகள் நலத்துறைத் தலைவர் பேராசிரியர் மருத்துவர் P. குணா அவர்களின் வழிகாட்டுதலிலும், இணைப் பேராசிரியர்கள் மருத்துவர் S. R. ராஜா மற்றும் மருத்துவர் R. சுரேஷ் ஆகியோரின் ஒருங்கிணைப்பிலும் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவை முன்னிட்டு மகப்பேற்றுக்குப் பிந்தைய தாய்மார்களுக்கு பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான புத்துயிர் அளித்தல் பயிற்சி, பச்சிளம் குழந்தைகள் அபாய அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் குறித்த பயிற்சி மற்றும் கங்காரு தாய் பராமரிப்பு (Kangaroo Mother Care) பயிற்சிகள் நடத்தப்பட்டன. மேலும், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான NRP கருத்தரங்கும் நடைபெற்றது. பிறந்த குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று நலமடைந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களைப் பாராட்டும் வகையில் “Proud NICU Warriors Recognition” நிகழ்ச்சியும் நடைபெற்றது. பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்வதில் ஆரம்பகால பராமரிப்பு, தொடர் மருத்துவக் கண்காணிப்பு மற்றும் பெற்றோரின் விழிப்புணர்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தேசிய பச்சிளம் குழந்தைகள் வார விழா நிறைவு பெற்றது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















