விருதுநகர்: நரிக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை விற்பனைக்காக சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 457.6 கிலோ எடையிலான தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2,38,800 என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், புகையிலைப் பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் TATA Super Ace நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நரிக்குடி காவல்துறையினர், கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




















