திருநெல்வேலி: திருநெல்வேலியில் நடைபெறும் ஆனி தேரோட்டத்தை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய்,இ.கா.ப., செய்தியாளர்களிடம் கூறியதாவது. எனது தலைமையில், துணை காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட திருநெல்வேலி மாநகரம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த 1200-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நான்கு ரத வீதிகளிலும் 250 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
குற்றங்களைத் தடுக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 உயர் கோபுரங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஒட்டுமொத்த கூட்டமும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.
ரதவீதிகளில் 8 காவல் உதவி மையங்கள், 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவக்குழு மற்றும் நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
காவல் ஆய்வாளா்கள் 100 பேர் மக்களுடன் மக்களாக கலந்து குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் பணியில் ஈடுபடுவர். கட்டுப்பாடுகள். ஜாதியை முன்னிலைப்படுத்தும் வகையிலான கைப்பட்டைகள், டி-சா்ட்டுகள், கயிறுகள், கொடிகள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. ஜாதிய தலைவர்கள் உருவம், அச்சுப்பொறித்த ஆடைகளை அணிந்து வரக்கூடாது. ஜாதி குறித்து எவ்வித முழக்கங்களும் எழுப்பக்கூடாது. மீறி செய்தால் வழக்குப் பதிவு செய்யப்படும். சமூக வலைதளங்களில் தேரோட்டத்தையும், ஜாதியையும் இணைத்து பிரச்னையைத் தூண்டும் விதமாக பதிவிட்டது தொடர்பாக நகர காவல் நிலையத்தில் ஏற்கெனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க கேட்டுக் கொண்டார். உடன் காவல் துணை ஆணையர்கள், அனிசுல் நாகர் (மேற்கு), சரவணன் (கிழக்கு) ஆகியோர் உடனிருந்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















