திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் வெங்கடேஷ். இவர் தலைக்கவசம் அணியாமல் தனது இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது அவ்வழியாகச் சென்ற திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. முனைவர், இரா.திருநாவுக்கரசு, இ.கா.ப., பார்த்துள்ளார். பின்னர் காவலர் ஒருவரை அனுப்பி தலைமைக் காவலரை தனது அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார். பின்னர் தலைமைக் காவலர் வெங்கடேஷ், தனது மனைவியுடன் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. அலுவலகம் சென்றுள்ளார்.
அங்கு டி.ஐ.ஜி., அவரிடம் தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை தாங்கள் அறியவில்லை எனக் கூறி, அவருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தலைக்காயம் சிகிச்சைப் பிரிவுக்கு சென்று அங்கு சிகிச்சையில் உள்ளவர்களின் நிலை குறித்து விசாரித்து வருமாறு கூறியுள்ளார்.
அதன் படி, தலைமைக் காவலர் வெங்கடேஷ், மருத்துவமனைக்கு சென்று பார்த்து விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய நபர்கள் படும் துன்பத்தையும், அவர்கள் கூறிய வார்த்தைகளையும் கேட்டுள்ளார். பின்னர் தலைக்கவசம் அணியாமல் பயணித்து விபத்தில் உயிரிழப்பவர்களால் பல குடும்பங்கள் நிா்கதியாக நிற்பதாகவும், அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் எனவும், சிறிய அலட்சியம் வாழ்க்கையையே மாற்றிவிடும் எனவும் கூறி, நடந்த நிகழ்வுகள் குறித்து விளக்கி சமூக வலைதளத்தில் காணொலி ஒன்றை வெங்கடேஷ் பதிவேற்றினார். அதே நேரம் தனக்கு தண்டனை வழங்காமல் நூதன முறையில் அறிவுரை வழங்கி, தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை உணர வைத்த டி.ஐ.ஜி.க்கு நன்றி எனவும் அதில் அவர் பதிவிட்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















