கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள், கணவரை இழந்து தனியாக வசித்து வருகிறார். அவரது மகனும், மகளும் வெளியூரில் வேலை செய்து வரும் நிலையில், வேலன் என்பவர் தினமும் தோட்ட வேலைக்காக அவரது வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த (01.07.2026) இரவு வீட்டின் உள்கதவை பூட்டிவிட்டு பழனியம்மாள் உறங்கியுள்ளார். மறுநாள் (02.07.2026) அதிகாலை வழக்கம்போல் வேலைக்கு வந்த வேலன், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு பழனியம்மாளை அழைத்துள்ளார்.
அப்போது வீட்டிற்குள் பதுங்கியிருந்த குற்றவாளி, பழனியம்மாளைக் கண்டதும் மாடியிலிருந்து கீழே குதித்து அருகிலிருந்த கழிவறைக்குள் ஓடிச் சென்றார். உடனே சுதாரித்த பழனியம்மாள், கழிவறையின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கந்திகுப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கழிவறைக்குள் பதுங்கியிருந்த குற்றவாளியை கைது செய்தனர். பழனியம்மாள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.




















