கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டு வரும் ‘நிமிர் – The Rising Team’ குழுவினருக்கு, வேதநகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் ஒரு வாரமாக பள்ளிக்கு வராமல் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, நிமிர் குழுவினர் மாணவியின் வீட்டிற்கு சென்று, பெற்றோர் மற்றும் மாணவியிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, உரிய ஆலோசனைகளை வழங்கினர். பின்னர் மாணவியை மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் சென்று, தொடர்ந்து கல்வியை மேற்கொள்ள தேவையான வழிகாட்டுதலையும் வழங்கினர்.
கடந்த ஆண்டும் இதே மாணவி பள்ளிக்கு தொடர்ந்து வராத நிலையில், நிமிர் குழுவினர் பலமுறை நேரில் சென்று அறிவுரை வழங்கி, அவரை மீண்டும் பள்ளியில் சேர்த்து கல்வியைத் தொடரச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. பள்ளி இடைநிற்றலைத் தடுத்து, ஒவ்வொரு குழந்தையும் தொடர்ந்து கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் ‘நிமிர் – The Rising Team’ குழுவினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.




















