கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் பணியில் காவல்துறையுடன் இணைந்து செயல்பட்டு வரும் ஊர்க்காவல் படையினரின் பங்களிப்பை பாராட்டும் வகையில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டார். செட்டிகுளம் சந்திப்பில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த ஐலின் பிரபா அவர்கள் சந்தேகத்திற்கிடமான நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த நபர் தக்கலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பணவிளை பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகன திருட்டு வழக்கு குற்ற எண் 289/26 U/s 331(4), 305(a) BNS இல் தொடர்புடைய , இடலாக்குடி குளத்தூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ராஜகுமரன்(26). என்பதும் இவர் மீது பல்வேறு காவல் நிலைய வழக்குகள் நிலுவையில் உள்ளதும், போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்பதும் தெரியவந்தது. குற்றவாளியை கண்டறிந்து கைது செய்ய முக்கிய பங்காற்றிய ஊர்க்காவல் படையை சேர்ந்த ஐலின் பிரபா அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கி கௌரவித்தார்கள்.




















