மதுரை: மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயாம்பட்டி கிராமத்தில் அதிகாலை சுமார் 3.00 மணியளவில் பதற்றத்தை ஏற்படுத்திய தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. காவல்துறை தெரிவித்த தகவலின்படி, மாற்று சமூகத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படும் மூன்று இளைஞர்கள் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளனர். அப்போது அங்கு உறங்கிக்கொண்டிருந்த சுப்பன் (70). (தந்தை: முத்தையா) என்பவரை ஆயுதத்தால் தாக்கியதில், அவரது தலையில் காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், அந்தப் பகுதியில் உள்ள நான்கு வீடுகளின் ஓடுகள் சேதப்படுத்தப்பட்டதாகவும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சம்பவத்திற்குப் பிறகு தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்தவுடன், மதுரை சரக காவல்துறை துணைத்தலைவர் அபினவ் குமார் (IPS) மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந. தேவநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ராமர் (26). லச்சுமன் (26). பிரவீன் (34) ஆகிய மூவரையும் காவல்துறையினர் விரைவாகக் கைது செய்து, சட்டரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சட்டம்-ஒழுங்கு நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந. தேவநாதன் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், “சாதி ரீதியான வன்முறை அல்லது மோதல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். தேவையெனில், அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















