சென்னை: சென்னை வில்லிவாக்கம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான பூபாலன், அத்திப்பட்டு பகுதியில் பதுங்கி இருப்பதை அறிந்த சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் (ANIU) செல்போன் சிக்னல் மூலம் அவரை பிடிப்பதற்காக பின் தொடர்ந்தனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் உட்பட இருவர் அத்திப்பட்டு பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்று பூபாலனை பிடிக்க முற்பட்டுள்ளனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பூபாலன் கூட்டாளிகள் உதவி ஆய்வாளர் வெங்கடேஷை அரிவாளால் தலையில் வெட்டி விட்டு அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து தலையில் வெட்டுப்பட்ட உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் மீஞ்சூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இது குறித்து தகவலறிந்த செங்குன்றம் துணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சரித்திர பதிவேடு குற்றவாளியான பூபாலன் அண்மையில் அத்திப்பட்டில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியது தெரிய வந்தது. தொடர்ந்து சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தனியார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கொலை முயற்சி, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தாக்குதல், ஆயுதங்களால் தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படை போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சரித்திர பதிவேடு குற்றவாளியை பிடிக்க சென்ற உதவி ஆய்வாளர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















