சென்னை: சென்னை பெருநகர காவல்துறையின் ‘காவல் கரங்கள்’ உதவி மையம் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆதரவற்றோர், வீடற்றோர் மற்றும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்களுக்கு மனிதநேய சேவைகளை வழங்கி வருவதாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A. அமல்ராஜ், இ.கா.ப. தெரிவித்தார். கடந்த (21.04.2021) அன்று தொடங்கப்பட்ட ‘காவல் கரங்கள்’ உதவி மையம், 94447 17100 என்ற 24 மணி நேர உதவி எண்ணின் மூலம் “மனிதம் போற்றுவோம்”, “மனித நேயம் காப்போம்” என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த உதவி மையம் மூலம் 10,298 வீடற்ற மற்றும் ஆதரவற்றோர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 4,418 பேர் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 4,257 பேர் அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர்.
மனநல பாதிப்புக்குள்ளான 1,114 பேர் சிகிச்சைக்காக மனநல மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், 509 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உரிமை கோரப்படாத 7,017 பேரின் உடல்களுக்கு கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், நன்கொடையாளர்களின் ஒத்துழைப்புடன் சேகரிக்கப்பட்ட 5,16,349 உணவுப் பொட்டலங்கள், காவல் கரங்கள் உணவு வாகனம் மூலம் காப்பகங்களில் உள்ள ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A. அமல்ராஜ், இ.கா.ப. அவர்களின் வழிகாட்டுதலிலும், காவல் கூடுதல் ஆணையாளர் (வடக்கு) கபில்குமார் C. சராட்கர், இ.கா.ப. அவர்களின் நேரடி கண்காணிப்பிலும், ஜூலை 11, 2026 அன்று வேப்பேரி காவல் ஆணையரக கலந்தாய்வு கூடத்தில், ‘காவல் கரங்கள்’ உதவி மையத்துடன் இணைந்து செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், ‘காவல் கரங்கள்’ திட்டத்தின் செயல்பாடுகள், சேவைகளை மேலும் மேம்படுத்தும் வழிமுறைகள், தன்னார்வலர்களின் கருத்துகள் மற்றும் தேவைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், மீட்புப் பணிகளுக்குத் தேவையான மீட்பு உபகரணங்கள், உடைகள் உள்ளிட்ட பொருட்கள் சுமார் 200 தன்னார்வலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டன. அதேபோல், ‘காவல் கரங்கள்’ லோகோ பொறிக்கப்பட்ட ஓவர் கோட்டுகளும் தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையாளர் A. அமல்ராஜ் மற்றும் காவல் கூடுதல் ஆணையாளர் கபில்குமார் C. சராட்கர் ஆகியோர், தன்னார்வலர்களின் மனிதநேய சேவைகளை பாராட்டியதுடன், எதிர்காலத்திலும் காவல்துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை தொடர வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 160 தன்னார்வலர்கள், நவீன காவல் கட்டுப்பாட்டு அறை காவல் உதவி ஆணையாளர், காவல் கரங்கள் உதவி மைய காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















