திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரம் பாரதி நகரைச் சேர்ந்த, இந்திய விமானப்படை அதிகாரியாக பணியாற்றி 1994ஆம் ஆண்டு உயிரிழந்த இந்திரஜித்துக்கு, அவரது நாட்டுப்பணியைப் பாராட்டி அரசு சார்பில் வீரவநல்லூர் பகுதியில் 1.66 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலத்தை அவரது குடும்பத்தினர் ஆவணப் பதிவு செய்ய முயன்றபோது, போலி ஆவணங்கள் மூலம் சிலர் மோசடியாக பதிவு செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்திரஜித்தின் மகன் டாக்டர் முத்துமணி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா சாஸ்திரி, இ.கா.ப. அவர்களிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளங்குளியைச் சேர்ந்த மாரியப்பன் (45), அவரது மனைவி சரவணத்தம்மாள் (42) மற்றும் அம்பாசமுத்திரம் கோடரங்குளத்தைச் சேர்ந்த லட்சுமி (39) ஆகியோர் மோசடியில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மூவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















