சென்னை: சென்னை பெருநகர காவல் துறை மற்றும் SRM கல்விக் குழுமம் இணைந்து ‘Drug Free Tamil Nadu – 2026’ என்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை, ஜூலை 8 ஆம் தேதி ராமாபுரத்தில் உள்ள ஈஸ்வரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடத்தின. இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A. அமல்ராஜ், இ.கா.ப. அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் விழிப்புணர்வு உரையாற்றினார். தனது உரையில், இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விலகி, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் மாற்றத்தின் தூதர்களாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், போதைப்பொருட்களின் தீமைகள், அவை ஏற்படுத்தும் சமூக மற்றும் குடும்ப பாதிப்புகள் குறித்து விளக்கி, “போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” என்ற இலக்கை அடைய மாணவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாணவர்கள் “I am Against Drugs” என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு, போதைப்பொருள் ஒழிப்பு குறித்த கையெழுத்து இயக்கம் மற்றும் செல்பி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஆர்வமுடன் பங்கேற்றனர். போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, விழிப்புணர்வை சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேர்க்கும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















