சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ்,இ.கா.ப. அவர்களின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட போதைப்பொருள் அழிப்பு குழு (Drug Disposal Committee – DDC), (17.07.2026) செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கத்தில் அமைந்துள்ள GJ Multiclave India Pvt. Ltd. நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மையத்தில், சுற்றுச்சூழல் மற்றும் சட்ட விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் மனநலப் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களை அறிவியல் முறையில் எரித்து அழிக்கப்பட்டது. சென்னை மாநகரின் பல்வேறு காவல் நிலையங்களில் போதைப்பொருள் (Narcotic Drugs and Psychotropic Substances Act) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 574 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 1,339.39 கிலோ கிராம் எடை கொண்ட கஞ்சா மேற்கண்ட தென்மேல்பாக்கத்தில் உள்ள நிறுவனத்தில் அழிக்கப்பட்டது. இந்த அழிப்பு நடவடிக்கை, சென்னை பெருநகர காவல், கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்), திரு.A.G. பாபு, இ.கா.ப. அவர்கள் தலைமையிலான போதைப்பொருள் அழிப்பு குழுவின் மேற்பார்வையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் காவல் துணை ஆணையாளர், நுண்ணறிவுப்பிரிவு-1, திரு. R.சக்திவேல், இ.கா.ப., தடய அறிவியல் துறையின் உதவி இயக்குநர் திரு.K.தேவராஜன் மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஆய்வாளர் (செங்கல்பட்டு) திரு.M.P.முரளிகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழு உறுப்பினர்கள் முன்னிலையில் அறிவியல் முறையில் எரித்து அழிக்கப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது சென்னை பெருநகர காவல்துறை தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இளைஞர்களின் எதிர்காலத்தையும் பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த உறுதிபூண்டுள்ளது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















