கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, குற்றமில்லா சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ் தலைமையில் ‘ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம்’ தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் காவல்துறையினரும் பொதுமக்களும் இணைந்து செயல்பட்டு குற்றத் தடுப்பை வலுப்படுத்துவதாகும். இதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு உட்கோட்ட அதிகாரிகள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ‘நம்ம ஊரு காவலர்கள்’ நேரில் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 7,997 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
மேலும், குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும், அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் குற்றவாளிகளை விரைவாக அடையாளம் காணவும் சிசிடிவி கேமராக்களின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 2,067 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் மூலம் காவல்துறையும் பொதுமக்களும் இணைந்து பாதுகாப்பான, குற்றமற்ற சமூகத்தை உருவாக்கும் முயற்சி தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது.



















