மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் உட்கோட்டம், திருமங்கலம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ். புளியங்குளம் பெரிய கண்மாய் பகுதியில், அரசு அனுமதியை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக கிராவல் மண் வெட்டி எடுத்து கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.தேவநாதன் அவர்கள் நேரில் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விருசங்குளம் கண்மாயில் விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி பெற்றிருந்த நிலையில், அந்த அனுமதியை தவறாக பயன்படுத்தி எஸ்.புளியங்குளம் பெரிய கண்மாயில் இருந்து சட்டவிரோதமாக கிராவல் மண் வெட்டி எடுத்து கடத்தியது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக, கண்ணன் (54). த/பெ. ராசுதேவர், சிக்கம்பட்டி, டிப்பர் லாரி ஓட்டுநர் மற்றும் பாபு (28). த/பெ. தங்கவேல், மேட்டுக்கடை, மணப்பாறை, திருச்சி மாவட்டம், பொக்லைன் இயந்திர ஓட்டுநர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒரு டிப்பர் லாரி மற்றும் ஒரு ஹிட்டாச்சி (Hitachi) பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில், பறிமுதல் செய்யப்பட்ட டிப்பர் லாரி மற்றும் ஹிட்டாச்சி இயந்திரம் மேலான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைக்காக திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்ட காவல்துறை, அரசு அனுமதியை தவறாக பயன்படுத்தி கனிம வளங்களை சட்டவிரோதமாக அகழ்வு செய்தல், கடத்தல் மற்றும் திருட்டில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் குறித்து தகவல் அறிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து ஒத்துழைப்பு வழங்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















