திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் வாணியம்பாடி, நிம்மியம்பட்டு, ஆலங்காயம், முல்லை கிராமம் மற்றும் ரெட்டியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணத் தடுப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, இணையவழி குற்றங்கள், நல்ல தொடுதல்–தவறான தொடுதல் (Good Touch–Bad Touch), காவலன் SOS செயலியின் பயன்பாடு மற்றும் 100, 1091, 1098, 1930 ஆகிய அவசரகால உதவி எண்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
மேலும், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன், போதைப்பொருள் விற்பனை அல்லது பயன்பாடு குறித்த தகவல்களை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்பான, போதை இல்லாத திருப்பத்தூரை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சிங்கப்பெண் அதிரடிப்படை காவலர்கள் கேட்டுக்கொண்டனர்.




















