திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல்மலைப் பகுதியான பூண்டி ஊராட்சியில் உள்ள நாட்டாம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதியில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப் படுவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் அவரது உத்தரவின்படி, கொடைக்கானல் உட்கோட்டப் பொறுப்பு காவல் துணைக் கண்காணிப்பாளர். இளங்கோவியன் அவரது மேற்பார்வையில், கொடைக்கானல் காவல் நிலைய காவல் ஆய்வாளர். திருவானந்தம் மற்றும் சார்பு ஆய்வாளர்கள். சிவராஜ், சுஷ்டியப்பு ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் இன்று (19.10.2026) சம்பந்தப்பட்ட தனியார் தங்கும் விடுதியில் சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையின் போது, மேற்கண்ட தனியார் தங்கும் விடுதியில் கடந்த ஓராண்டு காலமாகப் பணிபுரிந்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் (22). த/பெ. சுகுமார், பள்ளிக்கிக்கொல், வயநாடு, பேடகம் அஞ்சல், காசர்கோடு மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்திலிருந்து (17.10.2026) அன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த மேற்கண்ட தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த கேசன் (22). த/பெ. பால், எர்ணாகுளம், கேரளா ஆகிய இருவரும் சேர்ந்து போதைப்பொருட்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
அப்போது, அவர்களிடமிருந்து MDMA – 0.08 கிராம், LSD ஸ்டாம்புகள் – 8 எண்ணிக்கைகள் (மொத்த எடை 0.05 கிராம்) மற்றும் கஞ்சா – 30 கிராம் ஆகிய போதைப்பொருட்கள் கண்டறியப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களுடன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து, கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, இருவரையும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொடைக்கானல் பகுதியில் உள்ள சில தனியார் தங்கும் விடுதிகளில் போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்படுவதையும், அங்கு தங்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவற்றை விற்பனை செய்வதையும் தடுக்க காவல்துறையின் அடிப்படையில், காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து இதுவரை ஏழு தனியார் தங்கும் விடுதிகளுக்குச் சீல் வைத்துள்ளனர். மேலும், உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதிகளைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு, அவற்றிற்குச் சீல் வைப்பதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















