திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டத்திற்குட்பட்ட அந்திப்பட்டு இருளர் காலனியில் வசிப்பவர் பெருமாள் . இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் கிராமத்தில் வசிக்கும் ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான மீன் பண்ணைக்கு வேலைக்கு அழைக்கப்பட்டிருந்தார். குடும்பத்துடன் காவல் காக்கும் பணிக்கு மாதம் 15 ஆயிரம் என கொத்தடிமையாக வேலை செய்து வந்தார்.அங்கு மீன் பண்ணையில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதி இல்லாத தகர கொட்டகையில் தங்க வைக்கப்பட்டு 15,000 ரூபாய் சம்பளத்துக்கு பதிலாக பத்தாயிரம் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்ததும் நாளடைவில் மாதம் ஆயிரம் மட்டுமே கொடுத்து வந்ததாகவும் போதிய வருமானம் இல்லாமல் குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல் தங்களுடன் குழந்தைகளும் கொத்தடிமைகளாக பணி செய்து கொண்டு வந்துள்ள நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி இரவு படுத்துக்கொண்டிருக்கும்போது விஷப்பாம்பு ஒன்று அவரது மகள் சாமந்தியை கடித்துள்ளது.
இது குறித்து உடனடியாக ஜெய்சங்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜெய்சங்கர் உடனடியாக பாம்பு கடிக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் எளாவூர் சுங்கச்சாவடி அருகே உள்ள மருத்துவ மணிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு நேரம் விரயமாகி அடுத்து கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கும் சிகிச்சை பயனளிக்காமல் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்த சாமந்தி கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி மரணமடைந்துள்ளார்.இது குறித்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்திலும் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்திலும் சாமந்தியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் கொத்தடிமையாக தொழில் செய்து பாம்பு கடித்து இறந்த சாமந்திக்கு நீதி கேட்டு பொன்னேரி கிரிமினல் அட்வகேட் பார் அசோசியேசன் சங்கத்தினர் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாமந்திக்கு நீதி வேண்டி கோரிக்கை எழுப்பினர். உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் சாமந்திக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















