மதுரை: மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள பெருங்குடி அம்பேத்கர் நகரில் அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்தடையை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருவதாகவும், இதுகுறித்து மின்வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதன் எதிரொலியாக அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவனியாபுரம் போலீசார், காவல் ஆய்வாளர் ராமர் தலைமையில் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் அம்பேத்கர் நகர் பகுதியில் ஏற்பட்டிருந்த மின் கோளாறை உடனடியாக சரிசெய்து மின் விநியோகத்தை சீரமைத்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் சுமார் 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















