திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் தடுக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) காவல் ஆய்வாளர் ஆறுமுக நயினார் தலைமையிலான போலீசார் தொடர் கண்காணிப்பு மற்றும் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இன்று கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பழனி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், பழனி கொடைக்கானல் சாலையில் உள்ள பஞ்சாபி தாபா அருகே திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் சோதனை செய்தனர். விசாரணையில் அவர் பெயர் ராமகிருஷ்ணன் (49), த/பெ. ராஜகோபால், 1/122, பிள்ளையார் கோவில் தெரு, டி. புதுக்கோட்டை, தாசரிப்பட்டி, ஒட்டன்சத்திரம். திண்டுக்கல் மாவட்டம் என்பது தெரியவந்தது. அவரது இருசக்கர வாகனம் மற்றும் உடைமைகளை சோதனை செய்தபோது, சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 4.890 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்கொண்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட ராமகிருஷ்ணன் ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான வழக்கில் தொடர்புடைய முன்குற்றப் பதிவுடையவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அடையாளம் தெரியாத வடமாநில நபர்களிடமிருந்து கஞ்சாவை வாங்கி, அதனை சிறிய பொட்டலங்களாக பிரித்து, ஒரு பொட்டலத்தை ரூ.500/- என்ற விலைக்கு, பழனி கொடைக்கானல் சாலையில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















