திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கம்மவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட எல்.எஸ்.புதூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாத பாழடைந்த நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு பாழடைந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு மாற்றாக புதியதாக கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் பழைய நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. பள்ளி மாணவர்கள், முதியோர்கள், நோயாளிகள் என கிராமத்தில் பல தரப்பட்ட மக்கள் நடந்து செல்லும் சாலையில் இந்த குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைந்துள்ளது.
எலும்பு கூடு போல சிமெண்ட் பூச்சிகள் அனைத்தும் பெயர்ந்து விழுந்து கம்பிகள் ஆங்காங்கே வெளியே நீட்டிக் கொண்டுள்ளன. இதனால் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் உறுதித் தன்மை கேள்விக்குறியாக மாறி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் இருந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடித்து அகற்றி பொதுமக்களின் உயிருக்கு தீங்கு ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















